Fri Nov 15 00:52:46 IST 2024: ## ‘கங்குவா’ திரைப்படம் வெளியானது; எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா?
நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவாவின் இந்த படம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
படத்தின் துவக்கக் காட்சியில், ஒரு கதை சொல்லப்படுகிறது. பின்னர், ஆராய்ச்சி மையத்தில் சிறுவர்களின் மூளைத் திறனை அதிகரிப்பதற்கான சோதனை காட்டப்படுகிறது. ஆனால், சோதனைக் கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான். கோவாவில் குத்தாட்டம் போடும் பிரான்சிஸ் (சூர்யா) அறிமுகமாகிறார், அவர் காவல்துறையால் தீர்க்க முடியாத வழக்குகளைத் திறம்பட தீர்த்து தொகை பெறுபவர்.
தப்பித்த சிறுவன் பிரான்சிஸை சந்திக்கிறான். இருவரும் தங்களுக்குள் இனம்புரியாத உறவு இருப்பதை உணர்கின்றனர். ராணுவ பலம் கொண்ட ஆள்கள் சிறுவனைத் தேடி கோவாவிற்குள் நுழைகின்றனர். ஆனால், பிரான்சிஸ் சிறுவனை கைவிட மறுக்கிறார். இருவருக்கும் என்ன உறவு? சிறுவனை எதிராளிகளிடமிருந்து சூர்யா மீட்டாரா? என்பதே கதையின் முக்கிய கேள்வி.
‘கங்குவா’ திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸ், கலைத்துறை, ஒளிப்பதிவு மற்றும் மேக்கப் எனப் பல அம்சங்களில் பிரம்மாண்டமான தரத்தை காட்டுகிறது. பிளாஷ்பேக் காட்சிகளுக்கான கலைத்துறை மற்றும் விஎஃப்எக்ஸுகளும் தமிழ் சினிமாவிற்கு புதிய பாய்ச்சலைக் கொடுத்திருக்கின்றன. சூர்யாவுக்கும் முதலைக்குமான சண்டைக்காட்சி தத்ரூபமாக இருக்கிறது.
நடிகர் சூர்யா கங்குவா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பிளாஷ்பேக் சண்டைக்காட்சிகள் மற்றும் வசனங்களில் முழுக்க சூர்யாவின் படமாகவே இருக்கிறது. திஷா பதானியா மற்றும் யோகி பாபு இடம் பெறுகிறார்கள், பாபி தியோல் மிரட்டும் வகையில் நடித்துள்ளார். நடிகர்கள் அவினாஷ், கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் தேவையான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பலமாகவும் பலவீனமாவும் அமைந்திருக்கிறது. சில இடங்களில் பின்னணி இசையின் சப்தம் அதிகமாக இருப்பதால் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் வெற்றி பிரம்மாண்ட ஒளியமைப்பால் அசரடிக்கிறார்.
கங்குவா படத்திற்கு ஏகப்பட்ட புரமோஷன் செய்யப்பட்டது. ஆனால், இசை, ஒளிப்பதிவு, கலைத்துறை, மேக்கப், விஎஃப்எக்ஸ் என பல துறைகளின் கடுமையான உழைப்பு காட்சிக்குக் காட்சி தெரிந்தாலும் கதையும் திரைக்கதையும் தடுமாறும் இடங்களால் இவை அனைத்தும் பலத்தை இழக்கின்றன.
கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கு மேல் செலவு செய்து படத்தை எடுக்க முன் வருபவர்கள் தேர்ந்த திரை எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்கு கங்குவா உதாரணம். 2.30 மணி நேரம் கொண்ட படத்தில் பல காட்சிகள் சோர்வைக் கொடுக்கின்றன. தயாரிப்பாளர்கள் புரமோஷன்களை மட்டும் நம்பாமல் கதையையும் ஆழமாக தயாரிக்க வேண்டும்.
‘கங்குவா’ நெருப்புபோல் இருக்கும் என நடிகர் சூர்யா கூறியிருந்தார். ஆனால், நெருப்பு விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் இயக்குநர் தண்ணீர் ஊற்றி அணைத்திருக்கிறார்.