
Sun Oct 27 10:42:12 UTC 2024: ## விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெருந்திரளான கூட்டத்தை நடத்த உள்ளது
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் கட்சியின் அரசியல் மாநாட்டையொட்டி, விழாக்கோலம் பூண்டுள்ளது விக்கிரவாண்டி.
மாநாட்டு திடலை அலங்கரிக்கும் கட் அவுட்கள்: பணிகள் நிறைவடைந்த நிலையில், தலைவர்களின் கட் அவுட்கள், மாநாட்டுத் திடலை அலங்கரிக்கின்றன. மாநாட்டு மேடைக்கு இடதுபுறம் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேடைக்கு வலது புறம் தமிழன்னை, சேரர், சோழ, பாண்டியர் மன்னர்கள் மற்றும் விஜய் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டு மேடையில் “வெற்றிக் கொள்கை திருவிழா” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மாநாட்டு திடலின் முகப்பு , செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலுக்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ரிமோட் மூலம், 100 அடி உயரத்தில் தனது கட்சிக் கொடியை ஏற்றிவைக்கவுள்ளார்.
மாநாட்டிற்காக 40 கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன, 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டு பந்தல் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் தன்னார்வலர்களுடன், துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவன பாதுகாவலர்கள் 300 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
அரசியல் வருகைக்கு பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.