
Fri Nov 08 20:43:55 UTC 2024: ## இந்தியாவின் அபிஷேக் ஷர்மா: 2007 உலகக்கோப்பை நினைவுகளை மீட்டெடுத்து டர்பனில் களமிறங்குவார்
தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் போட்டி டர்பன் மைதானத்தில் நாளை (நேரம்: மாலை 8.30) நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு தயாராகும் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா, 2007 டி20 உலகக்கோப்பையின் நினைவுகளை மீட்டெடுத்துள்ளார். அந்தப் போட்டியில் யுவராஜ் சிங் டர்பனில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது அவரை வெகுவாக கவர்ந்ததாகக் கூறியுள்ளார். யுவராஜ் சிங் அவரது ஆலோசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
“டர்பன் மைதானத்தை முன்பு டிவியில் மட்டுமே பார்த்தேன். இப்போது நான் அதே மைதானத்தில் இருக்கிறேன். 2007ல் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது என்னை கவர்ந்தது. முதல் நாள் மைதானத்துக்கு வந்ததும், அவர் எந்த முனையில் இருந்து 6 சிக்சரை அடித்தார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன். மறக்க முடியாத நிகழ்வு அது! அந்த ஆட்டத்தை எனது குடும்பத்தினருடன் டிவியில் பார்த்து மகிழ்ந்தோம். அந்த வெற்றியை வீட்டுக்கு வெளியே சென்று கொண்டாடினோம். இப்போது அதே மைதானத்தில் நான் விளையாட இருப்பதை நிச்சயம் யுவராஜ் பார்ப்பார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை பெருமையடையச் செய்வேன்” என்று அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார்.