Tue Oct 15 08:20:00 UTC 2024: ## கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை: மரங்கள் விழுந்து சேதம், போக்குவரத்து பாதிப்பு
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாநகரில் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டனர். மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காந்திபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைபட்டது.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாரதி பார்க் ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து 2 கார்கள் மீது விழுந்தது. தீயணைப்பு துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றி கார்களை மீட்டனர். காந்திபுரம் பகுதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
தடாகம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள செங்கல் சூளையில் வைக்கப்பட்டிருந்த புகைபோக்கி இடிந்து சாலையில் விழுந்து ஆனைகட்டி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகளும் சேதம் அடைந்தன.
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலையில் கனமழை பெய்தது. மழையால் விஜயபுரம், புளியம்பட்டி பகுதிகளில் சாலையோரம் மழைநீர் தேங்கியது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியாறு போலீஸ் நிலையம் அருகே மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை-பேரட்டி சாலையில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம் அடைந்தது. குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி, நல்லப்பன் தெருவில் பால்ராஜ் என்பவர் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது. பெள்ளட்டி மட்டம், கேத்தி பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் ஊட்டியில் காலநிலையும் மாறி விட்டது. இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது.